ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பல்வேறு அதிரடி நடவடிக்கையிலும் இந்திய மத்திய அரசு இறங்கியுள்ளது.
அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்திய மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் சிந்து நதி நீரை நம்பியே உள்ளன. இந்தியாவின் இந்த நடவடிக்கை போர் அறிவிப்பிற்கு சமம் என்று பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியது. பாகிஸ்தான் நீர்வளத்துறைக்கு இந்திய ஜல் சக்தி துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார். பாகிஸ்தானின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய தீவிரவாத செயற்பாடுகள் இந்த ஒப்பந்தத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சூழலில், இந்திய இராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றார். பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தை தலைமை தளபதி உபேந்திரா திவேதி பார்வையிட்டார். பதற்றமான சூழல் எழுந்துள்ள நிலையில் இராணுவத் தளபதியின் காஷ்மீர் பயணம் முக்கியத்துவம் பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.