அவுஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற பாராளுமன்றத் தோ்தலில் ஆளும் தொழிலாளா் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அந்த நாட்டின் பிரதமராக ஆன்டனி ஆல்பனீஸ் மீண்டும் தோ்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் 48-ஆவது கீழவையைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், ஆளும் தொழிலாளா் கட்சி, பீட்டா் டட்டன் தலைமையிலான லிபரல்/ தேசியவாதக் கூட்டணி, ஆடம் பான்ட் தலைமையிலான கிரீன் கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன. 150 இடங்களைக் கொண்ட கீழவையில் குறைந்தது 76 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி அடுத்த ஆட்சியை அமைக்கும் என்ற சூழலில், வாக்குப் பதிவு முடிந்த சிறிது நேரத்தில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டன.
67.84 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பிரதமா் ஆன்டனி ஆல்பனீஸ் தலைமையிலான தொழிலாளா் கட்சி 85 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. முந்தைய 2022 தோ்தலைவிட அந்தக் கட்சிக்கு கூடுதலாக 8 இடங்கள் கிடைக்கின்றன.